சென்னையில் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக செங்கல்பட்டு பாஜக இளைஞரணி செயலாளரான லியாஸ் தமிழரசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில் மேலும், பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை அருகே செம்பாக்கம் திருவிக நகரைச் சேர்ந்த லியாஸ் தமிழரசன், தற்போது தனியார் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார். மேலும், பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சுமார் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை லியாஸ் காதலித்ததாக கூறப்படுகிறது. அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி லியாஸ் தமிழரசன் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
மேலும் இவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என தனது பெற்றோர்களிடமும் அறிமுகம் செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு அந்தப் பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற லியாஸ் தமிழரசன் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனை அவருக்கே தெரியாமல் வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார். தொடர்ந்து அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணிடம் இருந்து பணமாகவும் நகைகளாகவும் சுமார் 20 லட்சத்தையும் 20 சவரன் தங்கத்தையும் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்தப் பெண் கூறிய போது திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்ததோடு அவருடன் தனிமையில் இருந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில் லியாஸ் தமிழரசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அந்த பெண் சோதனை செய்தபோது அதில் பல பெண்களுடன் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
மேலும் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் மற்றும் நகையை பெற்றதும் தெரிய வந்தது. மேலும், பல பெண்களுடன் அவர் இருந்த வீடியோக்களும் அதில் இருந்தது. இதனையடுத்து லியாஸ் தமிழரசன் மீது சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் அந்த இளம் பெண். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போது தான் லியாஸ் தமிழரசனின் உண்மை முகம் தெரிய வந்தது. இந்த பெண் மட்டுமல்லாமல் மேலும் பல பெண்களுடன் அவர் தனிமையில் இருந்த வீடியோக்கள் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்களிடமும் இதே வசனத்தை கூறி ஏமாற்றியது தெரிய வந்த நிலையில் தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் லியாஸ் தமிழரசன் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்த நிலையில் பல பெண்கள் அவர் மீது புகார் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழரசனுக்கு ஆதரவாக சில போலீசார் செயல்பட்டதாகவும், வழக்கு தொடர்பான தகவல்களை கசிய விடாமல் பார்த்துக் கொண்டதோடு, செய்தி வெளியாகாமல் இருக்க குற்றவாளிகளிடம் பேரம் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.