டோக்கியா: ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா.. இதனால் எந்தளவுக்குக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருக்கிறது. ரிங் ஆஃப் பையர் என்ற பகுதியில் ஜப்பான் இருப்பதே இதற்குப் பிரதான காரணமாகும்.
இதன் காரணமாக அங்குத் தொடர்ச்சியாகப் பல சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. அப்படி தான் இப்போதும் அங்கே மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நிலநடுக்கம்: ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் திங்கள்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 37 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பொதுமக்கள் சாலைகளுக்கு ஓடினர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள தென்கிழக்கு கடலோர பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
முதலில் ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையே நிலநடுக்கத்தின் தீவிரம் 6.9 ரிக்டராக இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் அதை இப்போது அப்டேட் செய்துள்ளது. ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு
சுனாமி எச்சரிக்கை காரணமாகப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கடலோர பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திடீரென எதிர்பார்க்காத விதமாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்த நிலநடுக்கம் காரணமாக எதாவது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா.. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார சேதம் எவ்வளவு என்பது உள்ளிட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
என்ன காரணம்: உலகம் பார்க்க வெளியே ஒரே மாதிரி இருப்பது போல தான் தெரியும். ஆனால், உள்ளே இது பல டெக்டோனிக் தகடுகளைக் கொண்டதாக உள்ளது. பூமியின் மேலோட்டில் உள்ள மிகப்பெரிய துண்டுகள் தான் இந்த டெக்டோனிக் தகடுகள். பூமி முழுக்க பல டெக்டோனிக் தகடுகள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது தான் நிலநடுக்கம் ஏற்படும். அதாவது டெக்டோனிக் தகடுகள் நிலம் உள்ள பகுதிக்கு அடியில் மோதும் போது நிலநடுக்கம் ஏற்படும். அதேநேரம் கடல் பகுதியில் இவை மோதினால் சுனாமி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.