தலைவர் பிரபாகரனை கவசமாக பாவிக்கும் சீமான்: தமிழீழ அரசியல் துறை செய்யும் துரோகம் !



னக்கு காம இச்சை ஏற்பட்டால், “”உன் அம்மா அல்லது அக்காவோடு உடல்-உறவை வைத்துக் கொள்””  என்று தந்தை பெரியார் கூறினார் என்று, சற்றும் நாகரீகம் இன்றி சீமான் அவர்கள் பேசியது,  தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.   தந்தை பெரியார் அப்படிச் சொல்லி இருந்தால்,  எங்கே ஆதாரம் ?  என்று கேட்டால்  அதனை சரியாகக் காட்டாமல். “”விடுதலை“” என்னும் பத்திரிகையில் வந்தது என்கிறார்கள் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள். ஏதோ ஒரு பத்திரிகைச் செய்தியை வைத்துக் கொண்டு எவ்வாறு  இப்படிப் பேச முடியும் ? என்ற கருத்து ஒரு புறம் இருக்க..

இது ஒரு தமிழக,  அதுவும் உள்ளூர் அரசியல் நிகழ்வு. இதற்கும் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் “”பெரியாரா “” இல்லை “”பிரபாகரனா”” என்று பார் க்கலாம் என்று சீமான் சவால் விடுவது. தமிழகத்தில் தேசிய தலைவரது மதிப்பையும் மரியாதையையும் குறைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. விடுதலைப் புலிகள் என்றுமே தமிழக அரசின் அரசியலில் தலையிடவில்லை. அவர்கள் அதில் மிகவும் தீர்க்கமான முடிவை எட்டி இருந்தார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை.

தமிழக பாடப் புத்தகங்களில் இடம்பெற்று இருப்பவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட நபரை வெறுத்துப் பேசி, எதிர்ப்புகள் கிளம்பும் போது, தேசிய தலைவரின் பெயரைச் சொல்லி கவசமாக தேசிய தலைவரை பாவிப்பது என்பது, அனுமதிக்கப்பட முடியாத ஒன்று. தங்களை புலிகளின் அரசியல் பிரிவு என்று அடையாளப் படுத்தும் ஒரு குழு, சீமானுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு. அதில் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் அண்ணா  மற்றும் அவரது மகன் மீது குற்றம் சுமத்தியுள்ளார்கள்.  யார் இந்த தைரியத்தை கொடுத்தது ? 

தேசிய தலைவரின் அண்ணா மற்றும் அக்கா இருவரும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் நாட்டுக்காக எதனையும் செய்யவில்லை என்று குற்றம் சொல்ல, எவருக்கும் தகுதி இல்லை. முதலில் நீங்கள் தேசிய தலைவரை நேசிப்பவர் என்றால், அவரது குடும்ப உறுப்பினர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் கருத்தை விமர்சிக்கலாம்,  ஆனால் உங்கள் சுயநலத்திற்காக அவர்கள் மீது பழிபோட வேண்டாம். தமிழகத்தில் பல சிக்கலான கருத்துக்களையும் , சர்சைக்குரிய உரைகளையும் நிகழ்த்தி விட்டு. அது தொடர்பாக எதிர்ப்பு கிளம்பும் போது, தேசிய தலைவர், மற்றும் புலிகளின் ஆதரவாளர் நான் என்று சொல்லி, தேசியம் பின்னால் ஒளிய முடியாது. 

ஆமைக் கறி தொடக்கம், தான் உணவு உண்ணும் வேளையில்,  ஒரு விடுதலைப் புலிகள் போராளி கையில் பேப்பரில் தான் உட்கொண்ட உணவுகளை எழுதி வந்ததாகவும். அது தலைவரது உத்தரவு என்றும், சீமான் கூறியுள்ளார். ஏன் என்றால் அடுத்த நாள் அதே உணவை கொடுப்பதற்காகவாம். இப்படி விடுதலைப் புலிகள் எவருக்குமே செய்தது கிடையாது. எமது தேசிய தலைவரை சந்தித்தவன் என்ற முறையில் இதனை தெளிவாக நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். 2002 தொடக்கம் 2005ம் ஆண்டு வரை, கிளிநொச்சிக்கு, பல ஜாம்பவான்கள் வந்து தங்கிச் சென்றுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் டாங்- ஹோட்டலில் தான் புலிகள் தங்க வைப்பது வழக்கம். அவர்கள் எவருக்குமே சீமான் சொல்வது போல நடந்ததே இல்லை.

இதுபோல பல கதைகளை சொல்லும் சீமான் அவர்களுக்கு இறுதியாக ஒரு வேண்டுகோள். உங்கள் தமிழக அரசியலுக்காக எமது ஈழ விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் புலிகளையும் கொச்சைப் படுத்த வேண்டாம். மேலும் சொல்லப் போனால், உங்கள் பேச்சு, அதாவது “”பெரியாரா இல்லை பிரபாகரனா”” பார்த்து விடலாம் என்று பேசியது, பெரும் அவமானம் ஆகும்.. காரணம் பெரியார் வாழ்ந்த காலம் வேறு, எமது தேசிய தலைவர் வாழ்ந்த காலம் வேறு. அவர் போராடிய விதம் வேறு, …தலைவர் போராடிய களம் வேறு. மேலும் சொல்லப் போனால் பெரியார் பெண் அடிமைத் த னத்தை முற்றாக வெறுத்தார், சாதி ஒழியவேண்டும் என்று குரல் கொடுத்தார்.

அது போலவே ஈழத்தில் பெண்கள் அடக்குமுறை குறைவாக இருந்தாலும், எமது தேசிய தலைவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பெண்கள் படையணியை உருவாக்கினார். “”மாலதி”” படையணி என்றால் சிங்கள ராணுவமே சிதறி ஓடும். புலிகள் இயக்கம் ஆரம்பித்தவேளை, ஈழத்தில் சிலர் சாதி பார்க்கும் மரபில் இருந்தார்கள். ஆனால் புலிகள் தம்மோடு இணைந்த போராளிகளின் சாதியை பார்க்கவில்லை. இதனால் தந்தை பெரியாரின் முற்போக்கு சிந்தனைகளை விடுதலைப் புலிகள், ஏற்றுக்கொண்டார்களோ இல்லையோ… அதே வழியில் தான் நடந்தார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை. இதனை எவராலும் மறுக்க முடியாது. 

தமிழகத்தில் அரசியல் செய்ய ஆயிரம் வழிகள் உள்ளது, முல்லைப் பெரியார் அணை தொடக்கம், நீட் தேர்வு வரை பேசினால் கூட இன்னும் 30 ஆண்டுகள் வரை அரசியல் செய்ய முடியும். அதை விடுத்து தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை கொச்சைப் படுத்தும் விதமாக நடப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். இதனை ஒரு போதும், மானம் உள்ள எந்த ஒரு ஈழத் தமிழனும், அனுமதிக்கவே மாட்டான் என்று கூறி விடைபெறுகிறேன்.

எனவே தோழர் சீமான் அவர்களே, இனியாவது ஈழத் தமிழர்களை விற்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு நிற்கிறேன்.. 

அதிர்வுக்காக:

கண்ணன்