சீமானுக்கு புலிகள் கடும் எச்சரிக்கை: உடனே நிறுத்தா விட்டால் கடும் எதிர்வினையை சந்திக்கவேண்டும் !

தந்தை பெரியாருக்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தி விவாதிப்பதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈழத் தமிழ் போராளிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சுவிட்சர்லாந்தில் இருந்து ஈழத் தமிழ் போராளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: 

அண்மையில் தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் சதுரங்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும் எமது போராட்டத்தையும் விவாதப்பொருளாக்குவதை பார்த்து மனவேதனைப்படுகிறோம்.இது தொடர்பாக எமது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறோம்.

இதன் தொடர்ச்சியாக தலைவரின் பெறாமகனான கார்த்திக் மனோகரனை பொதுவெளியில் மரியாதைக்குறைவாகபேசியது எமது இனத்தை அவமானப்படுத்தியது போலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். வேலுப்பிள்ளை மனோகரன் குடும்பம், மாவீரர் குடும்பங்களில் ஒன்று. தேசியத் தலைவர் அவர்கள் உறவுகளை முதன்மைப்படுத்துபவரல்ல இருந்தாலும் சாள்ஸ் அன்ரனி துவாரகா என்ற இரண்டு மாவீரர்களை இந்த தேசவிடுதலைக்காக கொடுத்தவர்கள். 

தமிழீழ நடைமுறை அரசில் மாவீரர்கள் குடும்பத்தினரை எவ்வாறு தலைவர் அவர்கள் மதிப்பளிப்பார்,என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எனவே மாவீரர் குடும்பம் ஒன்றின் உறுப்பினர்களை அவமரியாதை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பொதுவெளியில் பெரியாருக்கு எதிராக தலைவரை வைத்து விவாதத்திற்கு அழைக்கும் சீமான் உடனடியாக இதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தவறும் பட்சத்தில் எமது கடுமையான எதிர்வினையாற்றலை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு ஈழப் போராளிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.