புலிகளின் ஆயுதங்களை இன்று வரை தோண்டி எடுத்து விற்பனை செய்யும் ராணுவம் !

கடந்த 11 ஆம் திகதி, வெல்லம்பிட்டிய பொலிஸ் அதிகாரிகளால் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவிவிற்கு அமைய தடுத்து வைக்கப்பட்டார். இதன்போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், கடந்த 14 ஆம் திகதி வெலிகந்த பகுதியில் மற்றொரு சந்தேகநபர், T56 ரக துப்பாக்கி, அதே வகையைச் சேர்ந்த ஒரு மெகசின் மற்றும் 18  தோட்டாக்களுடன் கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இவர்களுக்கும் ராணுவத்தை விட்டு தப்பிச் சென்ற நபர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புலிகள் புதைத்து வைத்திருந்த ஆயுதங்களையே இவர்கள் இவ்வாறு தோண்டி எடுத்து விற்பனை செய்வதோடு. சிலர் பாதாள உலக கோஷ்டிக்கு இந்த துப்பாக்கிகளை பாவித்து வேலை செய்தும் வருகிறார்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சந்தேகநபர் தொடர்பாக 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவரிடமிருந்து தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், மற்றொரு T-56 ரக துப்பாக்கி 200,000 ரூபாவுக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அந்த தகவலின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, நேற்று (18) வெலிஓயா பகுதிக்குச் சென்று, T-56 ரக துப்பாக்கி, ஒரு தோட்டா உறை மற்றும் 11  தோட்டாக்களுடன் மற்றுமொரு சந்தேகநபரையும் கைது செய்தது.