பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ம் தேதி தொடங்கிய நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். தற்போதைய நிலவரப்படி, இறுதி பட்டியலில் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. முத்துக்குமரன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்பட்டாலும், சௌந்தர்யா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வெளியில் மோசடி நடப்பதாக சனம் ஷெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
சனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஆதாரங்களின் மூலம் சௌந்தர்யாவின் தரப்பில் பிரச்சார குழு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதில், சௌந்தர்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிக் பாஸின் மிஸ்டு கால் எண்ணை பதிவு செய்து, பார்ப்பவர்கள் அதை சௌந்தர்யாவின் தனிப்பட்ட எண்ணாக நினைத்து கால் செய்யும்போது, அது ஓட்டாக மாறுவதாக கூறியுள்ளார்.
மேலும், சௌந்தர்யாவின் காதலன் விஷ்ணு தனது இன்ஸ்டாகிராம் குரூப்பில் “அவசரம், இந்த எண்ணிற்கு கால் செய்யுங்கள்” எனப் பதிவிட்டதாகவும், இதன் மூலம் சௌந்தர்யாவுக்கு அதிக ஓட்டுகள் குவிக்கப்படுவதாக சனம் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் மீதான சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுகள் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியின் நடத்துநர் விஜய் சேதுபதி, யாருடைய வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பிக் பாஸ் 8வது சீசனின் இறுதிப்போட்டி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.