Jallikattu: ”காளையை அடக்காமல் விட மாட்டேன்” – அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் திடீர் டிவிஸ்ட் தந்த வெளிநாட்டுக்காரர்

பொங்கல் தினமான இன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறு, விறுப்பாக நடைபெற்றது.  காலையில் 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் களமாடி அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு ஆட்டம் காட்டி யாருக்கும் பிடிக்கொடுக்காமல் ஓடியது. 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து பிரமித்து போன வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் “நான் காளையை அடக்காமல் விடமாட்டேன். நானும் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்குவேன்” என்று பிடிவாதம் பிடித்து களத்தில் இறங்கினார். 

அயர்லாந்தை சேர்ந்த கான் என்பவர் ஜல்லிக்கட்டு வீரராக களத்தில் இறங்கியுள்ளார். முன்னதாக அவருக்கு மருத்துவக் குழுவினர் முழு உடல் தகுதி பரிசோதனை செய்தனர். 53வயதான கான் ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகளின் அடிப்படையில் பங்கேற்றார். கான் அயர்லாந்து நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், சென்னையில் அவர் பணிபுரிவதால் இந்திய நாட்டின் ஆதார் கார்டையும், இந்திய குடியுரிமையையும் பெற்றுள்ளார். அதனடிப்படையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் களமாட கானை அதிகாரிகள் அனுமதித்தனர். 

உடல் தகுதி சோதனைக்கு பிறகு, ஜல்லிக்கட்டு டீ ஷர்டை அணிந்து கொண்ட கான் மதுரை மண்ணின் வீரர்களுடன் களத்தில் இறங்கி, வாடிவாசலில் சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயன்றான். 

மதுரை ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் மாடுபிடி வீரராக களமாடியது தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றியுள்ளது. கானின் வீரத்தை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.