Jallikattu: பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கிய வீரன்..!

 

தை பொங்கலை உலக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விழா என்றாலே ஜல்லிக்கட்டு தான் அடையாளமாக இருக்கும். வீரம் விளைந்த மதுரை மண்ணில் வாடிவாசலில் காளைகளின் சீறி பாயும் ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் பண்டிகை நிறைவு பெறாது. அந்த வகையில் தற்போது மதுரையின் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி பட்டையை கிளப்பியுள்ளது. 

நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்த நிலையில் இன்று (15-01-25) மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 930 காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்து விளையாடின. இதேபோல் நூற்றுக்கணக்கான வீரர்களுக்கு காளைகளை அடக்க களத்தில் இறங்கினர். காலை முதல் மாலை வரை விறு, விறுப்பாக நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு  போட்டியில், மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 52 பேர் காயமடைந்தனர். 

மொத்தம் 9 சுற்றுகளாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில்14 காளைகளை அடக்கிய நத்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் முதலிடத்தை பிடித்துள்ளார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி 12 காளைகளை அடக்கி 2ம் இடமும்,  பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் 11காளைகளை அடக்கி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முதல் பரிசு வென்ற மாடுபிடி வீரரான பார்த்தீபனுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த துளசிக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. வாடிவாசலில் சீறி பாய்ந்து யாருக்கும் பிடிக்கொடுக்காமல் ஆட்டம் காட்டி, முதல் இடத்தை பிடித்த காளையின் உரிமையாள விஜய் தங்கபாண்டிக்கு முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. 

மேலும், போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், காளைகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.