இந்தியாவுக்கு பெரும் சிக்கல்.. 54 ஆண்டுக்கு பின் வங்கதேச ராணுவத்துக்கு பாகிஸ்தான் பயிற்சி! பின்னணி

 

டாக்கா: நம் நாட்டுடன் வங்கதேசம் மோதலை கடைப்பிடித்து வரும் நிலையில் அந்த நாட்டுக்குள் இன்னொரு எதிரியான பாகிஸ்தான் ராணுவம் என்ட்ரி கொடுக்கிறது. பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசத்தை தனிநாடாக நம் ராணுவம் தான் உருவாக்கி கொடுத்தது. ஆனால் அதனை மறந்து வங்கதேசம், பாகிஸ்தான் ராணுவத்தை நாட்டுக்குள் அனுமதித்து பயிற்சி பெற உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

நம் நாட்டின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் இருந்தது. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தான் தனி நாடாக உருவானது. அதன்பிறகு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தனிநாடு கோரி போராட தொடங்கினர். இந்த கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக நம் நாட்டு ராணுவம் களமிறங்கியது.

1971 ம் ஆண்டில் பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்த கிழக்கு பாகிஸ்தான் தான் வங்கதேசம் எனும் புதிய நாடாக உருவானது. வங்கதேசம் புதிய நாடாக உருவாக நம் நாட்டு ராணுவம் தான் உதவி செய்தது. பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து நம் நாட்டு வீரர்கள் தான் சண்டையிட்டனர். நம் நாட்டின் தாக்குதலை தாங்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் நம் வீரர்களிடம் சரணடைந்தது. அதன்பிறகே வங்கதேசம் உதயமானது.

இதனால் தான் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் அதிக நெருக்கத்துடன் இருந்தார். ஆனால் அவர் கடந்த ஆண்டு அந்த நாட்டில் நடந்த வன்முறையை தொடர்ந்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடக்கிறது. இதற்கு தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் பொறுப்பேற்றது முதல் முதல் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகிவிட்டது.

எல்லையில் நம் நாட்டு வீரர்களை அந்த நாட்டு படைகள் சீண்டி வருகின்றன. அதேபோல் பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கம் காட்டி வருகிறார் முகமது யூனுஸ். இந்த நாடுகள் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடிக்கும் நிலையில் முகமது யூனுஸ் அவர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார். குறிப்பாக வங்கதேசம் என்ற நாடு உருவாக எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தானிடம் தற்போது முகமது யூனுஸ் நெருக்கம் காட்டி வருகிறார். அதோடு 1971ம் ஆண்டு முதல் வங்கதேசம் – பாகிஸ்தான் இடையேயான உறவு என்பது விரிசலுடன் உள்ளது. இந்த விரிசலை ஒட்டவைக்கும் பணியில் தான் முகமது யூனுஸ் முழுவீச்சில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதன்படி 1971ம் ஆண்டுக்கு பிறகு 54 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பாகிஸ்தான் ராணுவம், வங்கதேசத்துக்குள் என்ட்ரி கொடுக்கிறது. அதாவது பாகிஸ்தான் ராணுவம் சார்பில் வங்கதேச ராணுவத்துக்கு பயிற்சி என்பது வழங்கப்பட உள்ளதாம். இந்த பயிற்சி என்பது வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வங்கதேசம் – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

பாகிஸ்தான் இராணுவத்தின் கூட்டு தலைமை தளபதி குழுவின் தலைவர் ஜெனரல் எஸ் சம்ஷாத் மிர்சா தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ராணுவ பயிற்சி என்பது வங்கதேச இராணுவத்தின் பயிற்சி மற்றும் கட்டுப்பாட்டு தலைமையகமான மைமென்சிங் கன்டோன்மென்ட்டில் தொடங்கி மொத்தம் 4 கன்டோன்மென்ட்டுகளில் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் மேஜர் ரேங்கில் உள்ள அதிகாரிகள் வங்கதேச ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். போர் பயிற்சி, தற்காப்பு பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை இவர்கள் வங்கதேச ராணுவத்துக்கு சொல்லி கொடுக்க உள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் கைரோ மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ெஷபாஸ் ெஷரீப் மற்றும் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது இருநாடுகளின் உறவை புதுப்பிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இதையடுத்து தான் வங்கதேசத்தில் அந்த நாட்டின் ராணுவத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளிக்கும் ஒப்பந்தம் என்பது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் – வங்கதேசத்தின் இந்த செயல் என்பது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.