விரட்டியடிக்கப்படும் பாகிஸ்தானியர்கள்.. சவூதி, சீனா உள்பட 7 நாடுகளில் கிளம்பிய எதிர்ப்பு! என்னாச்சு?

 

இஸ்லாமாபாத்: சவூதி அரேபியா, சீனா உள்பட 7 நாடுகள் பாகிஸ்தான் மக்களை திடீரென்று நாடு கடத்த தொடங்கி உள்ளன. அதாவது அந்த 7 நாடுகளில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 258 பேர் வரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதன் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான்… அண்டை நாடாக இருந்தாலும் அத்துமீறுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. நம் நாட்டுடன் அடிக்கடி முஷ்டி முறுக்கி எல்லையில் மோதிய பாகிஸ்தானுக்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால் பயந்துபோன பாகிஸ்தான் வாலை சுருட்டிக்கொண்டுள்ளது. எல்லையில் நம் நாட்டுடன் மோதுவதை இப்போது குறைத்துள்ளது.

அதேவேளையில் தற்போது இன்னொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் போக்கு என்பது ஏற்பட்டுள்ளது. இருநாட்டை சேர்ந்தவர்களும் எல்லையில் நின்று சண்டை செய்து வருகின்றன. ஆப்கானிஸ்தானில் இயங்கும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் எனும் அமைப்பு பாகிஸ்தான் ராணுவத்தை பதம்பார்த்து வருகிறது.

 இந்த மோதல் பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இப்படியாக சுற்றி சுற்றி சண்டை செய்து வரும் பாகிஸ்தானுக்கு தற்போது 7 நாடுகள் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளன. இந்த 7 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்டவை அடங்கும். இதுதவிர கத்தார், இந்தோனேசியா, சைப்ரஸ், நைஜீரியாவும் இந்த பட்டியல் உள்ளன. இந்த 7 நாடுகளும் நேற்றுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 258 பேரை தங்கள் நாட்டில் இருந்து விரட்டியடித்துள்ளன. அவர்கள் அனைவரும் சொந்த நாட்டுக்கே சென்று விடங்கள் என்று பாகிஸ்தானுக்கு நாடு கடத்தி உள்ளன.

இதற்கு முக்கிய காரணம் அந்த நாடுகளில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது தான். அதாவது சவூதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் என்ற பெயரில் செல்வோர் அங்கு பிச்சை எடுத்து வந்துள்ளனர். அதேபோல் போதைப்பொருள் விற்பனை செய்தது, உரிய ஆவணங்கள் இன்றி வசித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனை காலம் முடிவடைந்த நிலையில் அவர்கள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் சவூதி பயணத்தின்போது முன்கூட்டியே ஹோட்டல் முன்பதிவு செய்யாதது, போதிய அளவு பணம் இல்லாமல் சென்றதாலும் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மொத்தம் 258 பேர் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதில் 14 பேர் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை பயன்படுத்தியும், 244 பேர் எமர்ஜென்சி பயண ஆவணங்கள் மூலமாகவும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் கராச்சி ஜின்னா விமான நிலையத்தில் வந்திறங்கியவர்களிடம் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் சவுதி அரேபியா, (யுஏஇ) மற்றும் சீனா உள்ளிட்ட ஏழு நாடுகளிலிருந்து 258 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சீனா, கத்தார், இந்தோனேஷியா, சைப்ரஸ் மற்றும் நைஜீரியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக தலா ஒரு பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிர அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.