இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சிந்து நதிப்படுகையில், மிகப்பெரிய அளவில் தங்கம் உள்ளதாக சொல்லப்படுகிறது. சுமார் 60 ஆயிரம் கோடி மதிப்பு இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த தங்கத்தை எடுத்தால் பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்டாக இருக்கும் என்று சொல்கிறார்கள். எனினும் இது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை இந்த நதியில் தங்கம் உண்மையாகவே இருந்தால், பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாலும் கூட ஆச்சர்யபட வேண்டியது இல்லை என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பல ஆயிரம் கோடி கடனாக பெற்றுள்ளது. அதுமட்டும் இன்றி உலக வங்கியும் 1.70 லட்சம் கோடி கடனாக கொடுக்க முன்வந்துள்ளது. இப்படி கடுமையான நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி திண்டாடி வரும் நிலையில், அந்த நாட்டில் ஓடும் சிந்து நதியில் தங்கம் புதைந்து கிடப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சிந்து நதியை பொறுத்தவரை உலகின் மிக பழமையான நதிகளில் ஒன்றாகும். வற்றாத ஜீவ நதியாக கருதப்படும் சிந்து நதி குறித்த வரலாற்று பாடங்களில் நாம் படித்து இருப்போம். சிந்து சமவெளி நாகரிகம் என்பது உலகின் மிகப்பழமையானது. கி.மு., 3,300 மற்றும் 1,300க்கு இடையே சிந்து சமவெளி பகுதிகள் செழித்து காணப்பட்டது. இமயமலையில் உற்பத்தியாகும் சிந்து நதியானது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சுமார் 3,610 கிமீ தூரம் பாய்கிறது. பாகிஸ்தானின் கராச்சி வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. நதி நீரை பங்கீட்டு கொள்வதில் இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வருவோம்.. பாகிஸ்தான் வடக்கு மலைப்பகுதிகளில் இருந்து தங்க கனிமங்கள் அடித்துவரப்பட்டு சிந்து நதியில் உள்ள அட்டோக் பகுதியில் பல மெட்ரிக் டன் தங்கம் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு தங்கம் புதைந்துள்ளதாம்.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே டெக்டானிக் பிளேட்டுகள் மோதி மலைகள் உருவாகும் போது, ஏற்பட்ட அரிப்பு காரணமாக தங்க துகள்கள் இங்கு அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதன் மதிப்பு பாகிஸ்தான் பண மதிப்பில் 600 பில்லியன் அளவுக்கு இருக்கும் என்றும் சொல்கிறார்கள். சிந்து நதியில் தங்கம் புதைந்து இருப்பதாக தகவல் வெளியானது தான் தாமதம், அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கத்தை வெட்டி எடுக்கிறோம் எனக் கூறிக்கொண்டு வண்டியை கட்டிகொண்டு கிளம்பிவிட்டார்களாம்.
இப்படி கனிமங்களை எடுப்பது சட்ட விரோதம் என்பதால் கையை பிசையும் பாகிஸ்தான் அதிகாரிகள், மக்கள் கூடாதவறு 144 தடை உத்தரவு போட்டுள்ளனர். இதனால், தங்கத்தை தோண்டி எடுக்க கனரக வாகனங்களுடன் அங்கு வந்த பாகிஸ்தானியர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்களாம். தங்கம் இருப்பதாக சொல்லப்படும் இடத்தில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட ஆய்வுகளின் படி அங்கு அதற்கான சாத்தியக்கூறுகள் கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தாமல் மணல் மற்றும் ஜிங்க் போன்ற கனிம சுரங்கம் அமைக்கவே ஆர்வம் காட்டுகிறார்களாம். ஒருவேளை சிந்து நதியில் தங்கம் இருப்பது உண்மையாக இருந்தால் பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாலும் கூட ஆச்சர்யபட வேண்டியது இல்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.