இந்தியாவை எச்சரித்த வங்கதேசம்.. தூதரக அதிகாரியை அழைத்து சம்மன்! மீண்டும் சீண்டும் முகமது யூனுஸ்

 

டாக்கா: நம் நாட்டுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான எல்லையில் நம்முடைய இடத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் வேலி அமைத்தனர். இதற்கு வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த நாட்டு வீரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வங்கதேசத்துக்கான இந்திய தூதரை நேரில் அழைத்து அந்த நாடு சம்மன் வழங்கி உள்ளது. இதன்மூலம் மீண்டும் வங்கதேசம் நம்மை சீண்ட தொடங்கி உள்ளது.

நம் நாட்டுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் நிலவும் பிரச்சனை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் பலரும் எல்லை தாண்டி நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். இதனை தடுக்கும் வகையில் இந்தியா – வங்கதேச எல்லையில் நம் நாடு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நம்நாட்டுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான எல்லையில் நம் நாட்டுக்கு சொந்தமான இடத்தில் வேலி அமைக்கும் பணியை எல்லை பாதுகாப்பு படையினர் தொடங்கினர். இதற்கு வங்கதேசத்தின் எல்லைபாதுகாப்பு படையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து நம் நாட்டு வீரர்களுக்கு ஆதரவாக எல்லையோர மக்கள் குவிந்தனர். இதனால் வங்கதேச வீரர்கள் எல்லையில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் இருநாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதற்றத்துக்கு முக்கிய காரணமே வங்கதேசம் தான். ஆனால் வங்கதேசம் நம் நாட்டின் மீது குற்றம்சாட்டுகிறது. அதாவது இருநாடுகள் ஒப்பந்தத்தை மீறி இந்தியா எல்லையில் 5 இடங்களில் வேலிகள் அமைக்க முயற்சிக்கிறது. இது எல்லையில் பதற்றத்தையும், தொந்தரவையும் ஏற்படுத்தி உள்ளது. முறையான அங்கீகாரம் இல்லாமல் முள்வேலி வேலிகள் அமைப்பது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் நட்பு உறவுகளின் உணர்வை குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில் தான் எல்லையில் நடந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதர அதிகாரி பிரணய் வர்மாவுக்கு வங்கதேசம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த சம்மன் என்பது வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தூதரக செயலாளர் ஜாஷிம் உதின் சார்பில் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரணய் வர்மா வங்கதேசத்தில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு ஜாஷிம் உதின் அவரிடம் 45 நிமிடங்கள் வரை பேசினார். இந்த சந்திப்பில் என்ன நடந்தது? என்பது பற்றி வங்கதேச வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:

வங்கதேசம்-இந்திய எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து வங்கதேச அரசாங்கம் ஆழ்ந்த கவலையை கொண்டுள்ளது. இதுபற்றி வர இருக்கும் வங்கதேச எல்லை பாதுகாப்பு படை மற்றும் இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை தொடர்பான பேச்சுவார்த்தையில் இதுபற்றி விரிவாக விவாதிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் சுனம்கஞ்சில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

 இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிருக்கு ஆபத்தான யுக்தியை நிறுத்த வேண்டும். கொலைகளை நிறுத்த வேண்டும். இதுபற்றி இந்தியா பலமுறை உறுதியளித்தாலும் கூட தொடர்ந்து நடப்பது கவலையளிப்பதாக தெரிவிக்கப்ட்டது.

எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் இருந்து இந்தியா எப்போதும் விலகி இருக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வங்கதேசம் தனது செய்திக்குறிப்பில் இப்படி கூறியிருந்தாலும் கூட அவர்கள் நம் மீது கோபமாக உள்ளனர். துருக்கி, பாகிஸ்தான் உதவி செய்வதாக கூறி உள்ளதால் வங்கதேசம் நம்மை சீண்ட தொடங்கி உள்ளது. இதற்கான எச்சரிக்கையாக தான் இது பார்க்கப்படுகிறது.