பியாங்யாங்: ரஷ்யாவும், வடகொரியாவும் நல்ல உறவில் உள்ளன. இந்த 2 நாடுகளும் சைலன்ட்டாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, உக்ரைன் நாடுகளை அலறவைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ரஷ்யாவுக்கு ஒரு லட்சம் வீரர்களை வடகொரியா அனுப்ப உள்ளதாகவும், இதற்கு கைமாறாக பாதுகாப்பதுறை சார்ந்த டெக்னாலஜிகளை ரஷ்யா, வடகொரியாவுக்கு வழங்க உள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்வெளியாகி உள்ளது.
வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். வடகொரியாவும், அமெரிக்காவும் பரம எதிரிகளாக உள்ளன. அதேபோல் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் நல்ல உறவு இருக்கிறதா? என்றால் வடகொரியாவுக்கு அதுவும் இல்லை. தென்கொரியா, ஜப்பான் நாடுகளை ஏவுகணை சோதனை மூலம் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது இந்த வடகொரியா.
அதேபோல் தங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்காவும் ஆக்ரோஷமாக எதிர்த்து வருகிறார் அதிபர் கிம் ஜாங் உன். உலகின் மிகப்பெரிய வல்லரசு என்று கூட பாராமல் சக்திவாய்ந்த ஏவுகணைகளை பரிசோதித்து அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது இந்த வடகொரியா. இப்படி அண்டை நாடாக இருந்தாலும் சரி, வல்லரசாக இருந்தாலும் சரி சண்டைக்கு தயாராக இருக்கும் வடகொரியா, நம் நட்பு நாடான ரஷ்யாவுடன் தோழமையுடன் உள்ளது. நம் நாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருக்கும் நல்லுறவு போல் ரஷ்யா, வடகொரியா நண்பர்களாக உள்ளன. இந்த நட்பின் காரணமாக தான் உக்ரைன் மீது போர் புரிந்து வரும் ரஷ்யாவுக்கு வடகொரியா 10 ஆயிரம் வீரர்களை அனுப்பி உதவி செய்துள்ளது. இது உக்ரைனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது அடுத்தக்கட்டமாக தான் ரஷ்யாவும், வடகொரியாவும் சைலன்ட்டாக ஒரு வேலையை செய்து வருகின்றன. இது சைலன்ட் வேலை என்று சொல்வதை விட அமெரிக்கா, உக்ரைன், தென்கொரியா, ஜப்பானை அலறவிட வைக்கும் நடவடிக்கை என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் ரஷ்யா – வடகொரியாவின் திட்டம் என்பது பயங்கரமானதாக உள்ளது. இதுபற்றி மிலிட்டரி தொடர்பான அனலிஸ்ட்டுகள் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது ரஷ்யா-வடகொரியா இடையே நல்ல நட்பு உள்ளது. இதனால் தான் உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்காக, வடகொரியா 10 ஆயிரம் வீரர்களை அனுப்பியது. இதற்கு அடுத்தப்படியாக 10 மடங்கு அதிகமாக அதாவது ஒரு லட்சம் ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு வடகொரியா அனுப்ப திட்டமிட்டுள்ளதாம். இவர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட உள்ளனர். இது ரஷ்யாவுக்கு பெரும் பலமாக அமையும் என்பதோடு, உக்ரைனுக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. இதனை சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.
அதோடு வடகொரியா மீண்டும் ரஷ்யாவுக்கு 1 லட்சம் வீரர்களை அனுப்பும் முடிவுக்கு பின்னால் இன்னொரு காரணம் உள்ளது. கடந்த வாரம் தான் வடகொரியா மீடியம் ரேஞ்ச் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி சோதித்தது. இது அந்த நாட்டின் ராணுவ பலத்தை வலுப்படுத்தும் வகையில் சோதனை செய்யப்பட்டது. குறிப்பாக தென்கொரியாவில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் வருகை தந்தபோதே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஏவுகணைசோதனைக்கு ரஷ்யா தான் உதவியதாக கூறப்படுகிறது.
ரஷ்யா நாட்டின் ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் வடகொரியா இந்த சோதனையை நிகழ்த்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு கைமாறாக தான் வடகொரியா, ரஷ்யாவுக்கு ஒரு லட்சம் வீரர்களை அனுப்ப உள்ளதாம் என்று மிலிட்டரி அனலிஸ்ட்டுகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் ரஷ்யா – வடகொரியா இடையே இன்னும் ராணுவ ரீதியிலான தொழில்நுட்ப பரிமாற்றம் என்பது நிகழும். இது வடகொரியாவின் ராணுவத்தை நவீனத்துமாக்கும்.
அப்படி பார்த்தால் நிச்சயம் அது வடகொரியாவின் அண்டை நாடாக உள்ள தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஏற்கனவே ஜப்பான் – ரஷ்யா இடையே மோதல் போக்கு உள்ளது. ரஷ்யா மீது ஜப்பான் தொடர்ந்து பொருளாதார தடைகளை விதிக்கும் சூழலில் அந்த நாட்டை பதற்றத்தில் வைக்க ரஷ்யாவுக்கும், வடகொரியாவை விட்டால் வேறு வழியில்லை. இதனால் ரஷ்யாவும் தொடர்ந்து வடகொரியாவுக்கு ராணுவ ரீதியிலான டெக்னாலஜி சார்ந்த வசதிகளை வழங்கும்.
இதுதொடர்பாக ஐநாவுக்கான அமெரிக்கா துணை தூதர் டோரதி காமில் ஷியா கருத்து தெரிவித்து இருந்தார். இதுபற்றி அவர், ‛‛ஜனவரி 8 ம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தபோதே வடகொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. ரஷ்யா, வடகொரியா கூட்டணியின் இந்த செயல் என்பது பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாகவும், அண்டை நாடுகளை ஒப்பிடும்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை பவர்புல்லாக்கும் வகையிலும் இருக்கிறது” என்று கூறியிருந்தார். இந்த சூழலில் தான் ரஷ்யா – வடகொரியா ஆகியவை சைலன்ட்டாக பார்க்கும் வேலை என்பது அமெரிக்கா, உக்ரைன், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.