ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின்போது போராட்டங்களை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில், வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
இந்த வருகையின்போது போராட்டங்கள் நடத்துவதை தடை செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்ட குழுக்கள் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போராட்டங்களை தடை செய்யும் மனு தொடர்பான விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.