US Plane Crashes in Southern Philippines: பிலிப்பைன்ஸில் அமெரிக்க இராணுவ ஒப்பந்த விமானம் விபத்து

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள நெல் வயலில் அமெரிக்க இராணுவ ஒப்பந்த விமானம் ஒன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த நால்வரும் உயிரிழந்தனர் என்று அமெரிக்க தூதரகம் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலிப்பைன்ஸின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், மகுயிண்டானாவோ டெல் சூர் மாகாணத்தில் இலகுரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை உறுதி செய்தது. இருப்பினும், கூடுதல் விவரங்களை உடனடியாக வழங்கவில்லை.

தெற்கு மாகாணத்தில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க இராணுவத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கனிஷ்கா கங்கோபாத்யாய் அசோசியேட்டட் பிரஸிடம் தெரிவித்தார். மேலும், அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை விமான விபத்து குறித்து விரிவான அறிக்கை வெளியிடும் என்றும் அவர் கூறினார்.

அம்படுவான் நகரில் உள்ள விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைவுகளில் இருந்து வெளிநாட்டினர் போல் தோன்றிய நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மகுயிண்டானாவோ டெல் சூர் பாதுகாப்பு அதிகாரி அமீர் ஜெஹாத் டிம் அம்போலோடோ தெரிவித்தார்.

மாகாண பேரிடர் தணிப்பு அதிகாரி விண்டி பீட்டி, குடியிருப்பாளர்கள் விமானத்தில் இருந்து புகை வருவதையும், வெடிச் சத்தம் கேட்பதையும் பார்த்ததாகவும், பின்னர் விமானம் பண்ணை வீடுகளின் தொகுப்பிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் தரையில் விழுந்ததாகவும் தமக்கு அறிக்கைகள் கிடைத்ததாக ஏபியிடம் தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்திலோ அல்லது அருகிலோ யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை என்றும், துருப்புக்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர் என்றும் பீட்டி கூறினார்.

உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், விமான விபத்தில் தரையில் இருந்த ஒரு நீர் எருமை மாடும் கொல்லப்பட்டது.

பல தசாப்தங்களாக பிலிப்பைன்ஸ் இராணுவ முகாமில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவை முஸ்லீம் போராளிகளுடன் சண்டையிடும் பிலிப்பைன்ஸ் படைகளுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்க உதவுகின்றன. இந்த பிராந்தியம், பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்க நாடான பிலிப்பைன்ஸில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்களின் தாயகமாகும்.

Source : AP