தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாரா வெற்றிமாறன்: TVK உள்ளே என்ன நடக்கிறது ?

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தவெகவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. 

மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட விஜய் அன்பன் என்பவர் அழகர் கோவிலில் இந்த மாட்டு வண்டி பந்தயத்தை நடத்தினார். இந்தப் பந்தயம் சிறிய மற்றும் பெரிய மாடுகள் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது, மேலும் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டியில் கலந்து கொண்டவர்களை வாழ்த்தினார். மேலும், வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 

இந்த சந்தர்ப்பத்தில், தவெக நிர்வாகிகள் இயக்குநர் வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இயக்குநர் வெற்றிமாறன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதனால், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துவிட்டார் என பலர் தகவல்களைப் பரப்பினர்.

ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் மாட்டு வண்டி பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்றுள்ளார். 

அவர் தனது அடுத்த படத் திட்டங்களுக்காக மதுரைக்குச் சென்றிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சி நடந்ததால் அதில் கலந்து கொண்டதாகவும், அவர் தவெகவில் இணைந்துவிட்டார் என்பதற்கான தகவல்கள் உண்மையற்றவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.