Vijay TVK: கூத்தாடிங்க யாரு தெரியுமா?- விஜய் போடும் டார்கெட்

திரைப்பட நடிகர்களை கூத்தாடிகள் என்று விமர்சிப்பதற்கு நடிகர் விஜய் பதிலடி கொடுத்து வருகிறார்.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் அதன் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அப்போது பேசிய அவர், நடிகர்களை காத்தாடி என விமர்சிப்பதற்கு காட்டமாக பதிலளித்தார். 

மாநாட்டில் பேசியவர், “கூத்து இந்த மண்ணோடும் மக்களோடும் கலந்த ஒன்று. இந்த கூத்தாடி என்கிற பெயர் நமக்கு மட்டும் வந்ததில்லை. அன்று தமிழ்நாட்டில் நம்ம ஊர் வாத்தியார் எம்.ஜி.ஆர், ஆந்திராவில் வாத்தியார் என்.டி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது `கூத்தாடி… கூத்தாடி’ என்றுதான் கூப்பாடு போட்டார்கள். 

அவர்களே அப்படி கூப்பிடும்போது நம்மை எப்படி கூப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் அந்த ரெண்டு கூத்தாடிகள்தான், இரண்டு மாநிலங்களின் ஆகப்பெரும் தலைவர்களாக இன்றும் மக்கள் மனதில் நீங்கா புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

சினிமா வெறும் பாட்டு டான்ஸ் காமெடி என்டர்டெய்ன்மென்ட் மட்டும் தானா… தமிழரின் வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடுதான் சினிமா. என்டர்டெயின்மென்ட் காரணத்தையும் தாண்டி சமூக அரசியல் புரட்சிக்கு உதவிய ஒரு பவர்ஃபுல் கருவிதான் சினிமா. திராவிட இயக்கம் பட்டித்தொட்டியெல்லாம் வளர்ந்ததே சினிமாவை வைத்துதான்” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

இந்த நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாளான இன்று அவருக்கு விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின்

மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்” என குறிப்பிட்டுள்ளார். 

அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து முழுநேர அரசியல்வாதியாக மாறியுள்ள விஜய் அவ்வபோது தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.