விரட்டியடிக்கப்பட்ட வீரர்கள்.. வங்கதேசம் வழங்கிய திடீர் சம்மன்.. இந்திய தூதர் சொன்ன முக்கிய தகவல்

 

டாக்கா: இந்தியா- வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் விவகாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் வங்கதேச வீரர்கள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக நம் நாட்டு தூதருக்கு வங்கதேசம் சம்மன் அனுப்பி உள்ளது. இது இருநாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் சம்மனுக்கு பிறகு வங்கதேசத்துக்கான நம் நாட்டு தூதர் முதல் முறையாக முக்கிய விஷயத்தை கூறியுள்ளார்.

நம் நாடு மற்றும் வங்கதேசம் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு வங்கதேசத்தில் நடைமுறையில் உள்ள இடைக்கால அரசு தான் காரணம். அந்த இடைக்கால அரசின் ஆலோசகராக இருக்கும் முகமது யூனுஸ் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் கடந்த கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருநாட்டு எல்லையில் மேற்கு வங்கத்தில் உள்ள நமக்கு சொந்தமான இடத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் வேலி அமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர். இதற்கு வங்கதேசத்தின் எல்லை காவல் படையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் வங்கதேசம் – நம் நாட்டுக்கு இடையேயான எல்லையில் 5 இடங்களில் வேலி அமைக்கும் பணி தொடங்கியது. இதனை தான் சட்டவிரோதமான நடவடிக்கை என்று வங்கதேசம் எதிர்க்க தொடங்கி உள்ளது.

 மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள சுக்தேவ்பூர் கிராமத்தில் வேலி அமைக்கும் பணியில் நம் நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.இதற்கு வங்கதேச நாட்டின் பிஜிபி எனும் எல்லை காவல் படையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் சூழல் உருவான நிலையில் நம் நாட்டு எல்லையோர மக்கள் குவிந்ததால் வங்கதேச ராணுவத்தினர் ஓட்டம் பிடித்தனர்.

இது இருநாட்டு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் வங்கதேசத்தின் இந்திய தூதர் பிரணய் வர்மாவுக்கு நேற்று வங்கதேசம் சம்மன் வழங்கியது. இதையடுத்து பிரணய்வர்மா டாக்காவில் உள்ள வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு சென்று அந்த நாட்டின் தூதரக செயலாளர் ஜாஷிம் உதினை சந்தித்து 45 நிமிடங்கள் பேசினார்.

இந்த வேளையில் எல்லையில் இருக்கும் பதற்றத்தை குறைக்க வேண்டும். எல்லையில் நடந்த சமீபத்திய நடவடிக்கை கவலையளிக்கிறது. எல்லையில் நடக்கும் கொலை சம்பவங்களை தடுக்க வேண்டும். எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் இருந்து இந்தியா எப்போதும் விலகி இருக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று வங்கதேசம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு பிறகு வங்கதேசத்துக்கான நம் நாட்டின் தூதர் பிரணய் வர்மா கூறுகையில், ‛‛வங்கதேச செயலாளரை நான் சந்தித்தேன். எல்லையில் குற்றமற்ற நிலையை உருவாக்கும் இந்தியாவின் நிலைப்பாடு, கடத்தல் சம்பவம், கிரிமினல்களின் ஊடுருவலை தடுத்தல் உள்ளிட்டவை வைத்து விவாதித்தோம். எல்லையில் நாட்டின் பாதுகாப்புக்காக வேலை அமைப்பதன் முக்கியத்துவம் பற்றி இருதரப்பும் புரிந்து வைத்துள்ளோம். இதுதொடர்பாக நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வங்கதேசத்தின் எல்லை காவல் படை ஆகியோர் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த புரிதலின் அடிப்டையில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒத்துழைப்பு என்பது இருக்கும்” என்று கூறினார்.